Monday, July 5, 2010

பத்திரிக்கைச் சுதந்திரம்னா என்னங்க?

கோவை செம்மொழி மாநாட்டிலே சாலமன் பாப்பையா தலைமையிலே பட்டிமன்றம் ஒன்று நடந்தது. அதிலே பத்திரிக்கைத்துறை சார்பாக நக்கீரன் கோபால் பேசினார். அவரைப் பார்த்தமாத்திரத்தில், பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் தனது பத்திரிக்கையின் விற்பனைக்காக பிரபாகரனின் மரணத்தைப் பயன்படுத்திக்கொண்ட கீழ்த்தரமான மோசடிச்செயல்தான் நினைவுக்கு வந்தது.


தன் மரணச் செய்தியையே, தொலைக்காட்சியில் கண்டு பிரபாகரன் நகைப்பது போன்ற கிராபிக்ஸ் படத்தை வெளியிட்டு, அதன்மூலம் தனது பத்திரிக்கையின் விற்பனையை அதிரடியாக அதிகரித்துக்கொண்டார். பத்திரிக்கை வெளியான சிலமணி நேரங்களிலேயே விற்றுத்தீர்ந்தது. பிரபாகரன் இன்னமும் உயிரோடு இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் தீவிர ஆதரவாளர்கள்கூட நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான படத்தை உண்மையென்று கருத்து வெளியிடவில்லை. அந்தப் படம் எப்படி, யாரால் எடுக்கப்பட்டது என்ற தகவலும் இன்றுவரை வெளியிடப்படவில்லை.


பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் இதுபோல பல்வேறு பத்திரிக்கைகளும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் தைரியமாக செயல்பட்டு வருகின்றன. இலவச இணைப்பு என்ற பெயரில் முன்னணிச் செய்தித்தாள்கள் பத்திரிக்கை இணைப்புகளை வழங்குவது வழக்கத்தில் உள்ளது. பெயரல்ளவில்தான் இலவச இணைப்பு. ஆனால் அந்த இணைப்பு வரும் நாட்களில் மட்டும் செய்தித்தாளின் விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்கூடு. இதுகுறித்து எனது கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கேள்வி எழுப்பினேன். இந்த நடைமுறை, சட்டத்திற்குப் புறம்பானதுதான் என்று அப்போது பதிலளித்தார்கள்.


பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுவதில் இருக்கும் ஒளிவுமறைவுகளைப் பார்க்கும்போதுதான் பத்திரிக்கை அதிபர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்குமான வித்தியாசத்தை உணர முடியும். தனக்குப் பிடித்த அரசியல் நிலைப்பாடுடைய கட்சிகளின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, மற்ற கட்சிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது, திரித்துக் கூறுவது என பல்வேறுவிதமான குறுக்குப் புத்திகளை கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிக்கைகளுமே செயல்படுத்தி வருகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக இணையதள செய்திப் பத்திரிக்கையான தட்ஸ்தமிழ்.காமைச் சொல்லலாம். ஜெயலலிதா குறித்த செய்திகளை வெளியிடும்போது "கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்" என்றுதான் நக்கலுடன் ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுவார்கள். மற்ற அரசியல் தலைவர்களுக்கு இந்த முறையை கடைபிடிப்பதில்லை.




பத்திரிக்கைச் சுதந்திரத்தின் அடுத்த மோசடியாக விளம்பரங்களை வெளியிடுவதில் வரம்பு மீறுவதைச் சொல்லலாம். தங்களது பத்திரிக்கையில் மது, புகைபிடித்தல் தொடர்பான பொருட்களின் விளம்பரங்களை வெளியிடுவதில்லை என மார்தட்டிக் கொள்ளும் விகடன் போன்ற பத்திரிக்கைகளும் தற்போது விளம்பரங்களுக்கிடையேதான் அங்கங்கே ஒன்றிரண்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இவ்வார ஆனந்தவிகடன் பத்திரிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டால், முதல் ஏழு பக்கங்களில் முழுக்க முழுக்க விளம்பரங்களே இடம்பிடித்திருக்கின்றன! விளம்பரங்கள் வெளியிடும்விதத்தில் முன்னணிப் பத்திரிக்கைகள் செய்துவரும் இன்னொருவகை மோசடி சற்று சுவாரஸ்யமானது. பல்வலிக்கான காரணங்களை விளக்கி கட்டுரை ஒன்றை வெளியிட்டு, கட்டுரை முடிவில் "இத்தகைய பல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் எங்கள் மருத்துவமனையில் சிறந்த முறையில் குணப்படுத்துவோமென மருத்துவர் தெரிவிக்கிறார்" எனக்கூறி விளம்பரம் செய்திருப்பார்கள்!
விளம்பர ஆதரவில்லாமல், முழுக்கமுழுக்கச் செய்திகளை மட்டுமே வெளியிடும் பத்திரிக்கைகளில் தனிச்சுற்றுச் சிற்றிதழ்கள் தவிர, "புதிய ஜனநாயகம்", "புதிய கலாச்சாரம்" பத்திரிக்கைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


பத்திரிக்கைச் சுதந்திரத்தின் மற்றொரு மோசடியாக, சாமியார்களைக் கொண்டு எழுதப்பட்டுவரும் ஆன்மீகத் தொடர், மற்றும் போலி மருத்துவர்களைக் கொண்டு எழுதப்படும் மருத்துவத் தொடர்களைக் குறிப்பிடலாம். நேற்றுவரை நித்தியானத்தாவிற்காக கதவைத் திறந்து வைத்த குமுதம் பத்திரிக்கை, சிக்கலில் அவர் சிக்கியதுமே தலைகீழாக மாறி, அவருக்கு அரைகுறை எதிர்ப்பு தெரிவித்து, சிஷ்யப்பிள்ளையான சாருநிவேதிதாவை வைத்தே தொடர் எழுத வைத்து காசு பார்க்கும் உத்தியை மாற்றியமைத்துக்கொண்டது, கேவலமான மோசடியாகும். குமுதத்திற்கும் நித்தியானந்தாவிற்குமான உறவை விசாரித்தாலே பல உண்மைகளை அம்பலப்படுத்தலாம்!

ஆளுங்கட்சியினரால் பத்திரிக்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகும்போது பத்திரிக்கையாளர் மன்றம் நேரடியாக வீதிக்கே வந்து போராடியதை பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் முன்னணிப் பத்திரிக்கைகளை யார் கட்டுப்படுத்துவது? கட்டுப்படுத்தும் பொறுப்பு பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு இல்லையா? பத்திரிக்கையாளர்களுக்கு அந்த பொறுப்புணர்வு இல்லையா? பத்திரிக்கைகள் நாட்டின் ஒன்றாவது தூண், ரெண்டாவது தூண் என்று என்னத்தையாவது கப்ஸா விட்டுப் பீற்றிக்கொள்வது எந்தவிதத்தில் நியாயம்? அல்லது அதுதான் பத்திரிக்கை சுதந்திரமா?!

தீவிரவாத மலர்! - நாட்டு நடப்பு!

இன்றைய (மே 24, 2010) தினமலர், வாசகர் கடிதப் பகுதியில், கட்டம் கட்டிக் காட்டமாக எழுதப்பட்டிருந்த செய்தியில், தங்களது அடிப்படை உரிமைகளுக்காகச் சீன அரசை எதிர்த்துப் போராடிய மாணவர்களை புல்டோசர்களை மேலேற்றிக் கொன்றதுபோல, அனைத்து மாவோயிஸ்டுகளையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற கருத்து சொல்லப்பட்டிருந்தது. என்ன ஒரு தேசபக்தி!


அப்படியானால், மக்களுக்கு இடையூறு தரும் முறையில், அரசுக்கெதிராக அவ்வப்போது போராட்டம் நடத்தும் பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், போகுவரத்துத் தொழிலாளர்கள், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாணவர்கள் என அனைவருக்கும் இம்முறையிலேயே தண்டனை கொடுத்து விடலாமா?


அந்த லிஸ்டில் பாபர் மசூதியை இடிக்க வைத்து, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர்6ஆம் தேதியை ஒட்டி, பாதுகாப்பு எனும் பெயரில் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கிய அத்வானியும், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கொல்வதற்குக் கூட கூலிப்படை அனுப்பிய மாண்புமிகு நரேந்திர மோடியும் முதன்மையாக நிற்பார்களே! சம்மதம் தானா?!



கர்ப்பிணி வயிற்றைக் கிழித்து என எழுதும் போதுதான் "உன்னைப் போல் ஒருவன்" கமலின் நினைவு வருகிறது. குஜராத் கலவரம் குறித்து உருகி, அழுது புரண்டு நடித்து, காசு அழுது படம் பார்த்த எங்களையும் அழ வைத்தீர்களே, ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டாமென நீங்களே உங்கள் நண்பர், திரு. அமிதாப் அவர்களை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் வேண்டிக்கொள்ளலாமே?


தெனாலியில் இலங்கைப் படையின் குண்டுவீச்சில் உயிரிழந்த தாயைப் பற்றி, ஒரே மூச்சில் பேசிக் கைதட்டல் வாங்கிய உங்களால் அங்கு நடந்து வரும் மனித உரிமை மீறலை உணர்த்திட முடியாதா என்ன? தனது தசாவதாரத்துக்காக ஜாக்கிசானை வரவழைத்து சிரிக்க வைத்த நீங்கள், கேவலம், மனிதர்களாய்ப் பிறந்துவிட்ட ஈழ மக்களுக்காக, இந்தித் திரையுலகை தடுத்திட முடியாதா என்ன?


அதுசரி, இம்முறை இந்தித் திரையுலகைத் தடுப்பதன்மூலம், கஜினி முகமது போல ஈழப் பகுதிகளின் மீது படையெடுக்கும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக வர்த்தக பெருநிறுவனங்களைத் தடுத்திடவா முடியும்? இதுபோன்ற எல்லை கடந்த தீவிரவாதம், தன்னாட்டு மக்களின் மீதே திணிக்கப்படுவது தானே மாவோயிஸ்டுகளையும், நக்சலைட்டுகளையும், விடுதலைப்புலிகளையும் உருவெடுக்கச் செய்கிறது?



காடுகளை அழித்ததால்தானே இப்போது யானைகளும், சிறுத்தைப்புலிகளும் வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து நாசம் செய்கின்றன? பழங்குடி மக்களை, அவர்தம் வாழ்விடங்களை விட்டு விரட்டி விட்டு, தொழிலதிபர்களுக்கு அந்த நிலங்களைப் பட்டா போட்டுத் தருவது தீவிரவாதமா? மிதவாதமா? ஜனநாயகத்தைத் தோற்கடித்து வெற்றிபெற்ற உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம், தொழிலதிபர்களின் முந்தானைக்குள் ஒழிந்துகொண்டு, மாவோயிஸ்டுகளை ஒழிப்போமென ஊளையிடுகிறார்! வாழ்க ஜனநாயகம்!



வரவிருக்கும் தேர்தலுக்குள் குடும்பத்திற்குள் மீண்டும் வெளிப்படையான பிளவு ஏற்படக்கூடாதென தன்னையும் பேராசிரியரையும் தவிர வேறு யாரும் பத்திரிக்கைகளுக்கு எந்த பேட்டியும் தரக்கூடாதென கலைஞர் கட்டளையிட்டார். புதிதாகச் சேர்ந்த குஷ்புவோ விஜயகாந்தைப் பற்றி காட்டமாகப் பத்திரிக்கை பேட்டி கொடுத்து பொளந்து கட்டுகிறார்! ஒருவேளை யாராவது இதுபற்றி கேட்டால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பேட்டி கொடுப்பதில் தவறில்லை, ஆனால் 'பாதுகாப்பான முறை'யில் பேட்டி தரவேண்டுமெனச் சொன்னாலும் சொல்லுவார்!



குஷ்பு வந்தாலும் வந்தார், தேர்தல் கூட்டணி குறித்த அலம்பல்களை, மன்னிக்கவும், அலசல்களை அதிக விற்பனைப் பத்திரிக்கைகள் தொடங்கி விட்டன! 'திருதிரு'வளவன் திமுக கூட்டணியில் நீடிப்பாரா? அதிமுகவுக்குத் திரும்புவாரா? 'பல்டி புகழ்' பாமக திமுக பக்கமா? அதிமுக பக்கமா? எனப் பக்கம் பக்கமாக அனல் பறக்கும் கட்டுரைகள்! மக்களுக்கோ, புள்ளைக்கு பொறியியல் படிப்புக்கு எவ்வளவு அழணுமோ? மருத்துவப் படிப்புக்கு படிப்புக்கு எவ்வளவு அழணுமோ? என்ற ஜனநாயகக் குழப்பம்! வாழ்க குடியரசு!

Monday, March 29, 2010

கசக்கும் மருந்துகள் - ஓர் எச்சரிக்கை!


ஒரு நகைச்சுவை:

"அந்த மருந்துக்கடைக்குள்ள தொல்பொருள்த்துறையினர் ஆராய்ச்சி பண்றாங்களாமே?"

"ஆமா, அங்க 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மருந்து மாத்திரையெல்லாம் கண்டெடுத்தாங்களாம்!"

இனி விஷயத்திற்கு வருவோம்!

சிறிய தலைவலிக்கும், பல்வலிக்கும் மருத்துவமனை சென்று டோக்கன் பெற்று, காத்திருந்து, மருத்துவருக்குக் கட்டணம் செலுத்திய பின்பு மருந்து மத்திரை வாங்கப் பொருளாதார வசதியும் வருமானமும் இல்லாத மக்கள் கூட்டம் பெருகிவரும் இன்றைய சூழலில், மருந்துக்கடைகளின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதை உணர்ந்த மருந்து விற்பனையாளர்கள் கூட்டமோ, மக்களின் இயலாமையையும், அறியாமையையும் வெகுசுலபமாக காசாக்கி வருகிறது!

அண்மையில் குப்பையில் கொட்டப்பட்ட பயன்பாட்டு(Expiry Date) நாள் முடிந்த மருந்து மாத்திரைகளைக் கைப்பற்றி மீண்டும் பயன்பாட்டு நாளைப் புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டுவரும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து நாம் அறிந்த, அறியாத உண்மைகளைப் பற்றி விவரங்கள் சேகரித்ததில் மருந்து விற்பனையாளர் கூட்டத்தின் சங்கிலித்தொடர் ஏமாற்று வேலைகளை அறிய முடிந்தது.
நான் மேலும் குப்பையைக் கிளறியதில் கிடைத்த சில தகவல்களை இங்கு வரிசைப்படுத்துகிறேன்.



முதலாவதாக, ஒரு மருந்துக்கடை தொடங்க வேண்டுமென்றாலே அதற்கான விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடித்து கடை நடத்த வேண்டும். உதாரணம்: கடை முழுவதும் குளிர்சாதன வசதி செய்திருக்க வேண்டும். ஆனால் இதனை ஆய்வு செய்யும் மருந்து ஆய்வாளரோ(Drug Inspector) ஆய்வு செய்யாமலேயே கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதி அளித்து விடுகிறார். ஏதோ ஓர் இணைய மையத்திலிருந்து குடியரசுத் தலைவருக்கு மொட்டையாக ஈமெயில் மிரட்டல் வந்த காரணத்தால், இன்று இணைய மையங்கள் அனைத்திலும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் அன்றாட மக்களின் உயிர்நாடிப் பிரச்சனையில் எவ்வளவு மெத்தனப்போக்கு!

சென்னையில் மட்டும் 4000ற்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் உள்ளன. இவற்றில் 300லிருந்து 400 கடைகள் மட்டுமே மருந்தாளுநர் பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்படுகிறன. மற்ற கடைகள் அனைத்திலும், ராமாயணக் கதையில், ராமனின் காலணியை வைத்து பரதன் நாடாண்டதுபோல, மருந்தாளுனரின் வெறும் கையெழுத்தை மட்டுமே வைத்து, மக்களின் தலையெழுத்து தீர்மானிக்கப்படுகின்றது!

மருந்தாளுனருக்குக்கூட மாதச்சம்பளம் கொடுக்க இயலாத பரிதாப நிலையிலா இத்தனை மருந்துக்கடைகள் நடத்தப்படுகின்றன? இல்லவே இல்லை! விற்பனை செய்யப்படும் அனைத்து மருந்து மாத்திரைகளுமே 50% முதல் 1000%ற்கும் மேலான லாபம் வைத்தே விற்பனைக்கு வருகின்றன. உதாரணமாக, அதிகமாக விற்பனையாகும் செட்ரிசைன்(CETRIZINE) என்ற மாத்திரையின் தயாரிப்புச் செலவு 10 பைசாவிற்கும் குறைவே. அது அடுத்தகட்டமாக, ஸ்டாக்கிஸ்டுகளால்(பதுக்கல்காரர்கள் என்றும் அன்புடன் அழைக்கலாம்!) வாங்கப்பட்டு, 30 பைசாவிற்கு சில்லரை விற்பனையாளர்களிடம் விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையாளர்களோ இவற்றை 3 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்பனை செய்கிறார்கள். லாப சதவிகிதத்தை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்!

இப்படி ஸ்டாக்கிஸ்டுகளிடம் வாங்கப்பட்ட மருந்து மாத்திரைகளின் பயன்பாட்டு நாள் நிறைவடைந்தால் ஸ்டாக்கிஸ்டுகளிடமே திருப்பித் தரப்படும். அவற்றை தண்ணீரில் கரைத்தோ, தீயிட்டோ அழிப்பதுதான் மருந்து விற்பனை விதிமுறை. ஆனால் இந்த விதிமுறையை ஏமாற்றித்தான் தில்லுமுல்லுகள் இங்கே நடக்கின்றன.

காலாவதியான மருந்துகளை உரிய நிறுவனங்களிடம் ஸ்டாக்கிஸ்டுகள் ஒப்படைத்தால் மிகக் குறைவான தொகைதான் திரும்பக் கிடைக்கும். இதைத் தவிர்க்க இந்த ஸ்டாகிஸ்டுகள், காலாவதியான மருந்துகளின் பயன்பாட்டுத் தேதியை மாற்றியமைத்து மறுவிற்பனைக்கு அனுப்புகிறார்கள். இதற்கு மருந்து ஆய்வாளர்களும் உடந்தை. மாதாமாதம் மருந்துகளின் இருப்பு குறித்து விவரத்தை ஆராய்ந்து கணக்கெடுப்பது மருந்து ஆய்வாளர்களின் கடமை. ஒருசில பெண் ஆய்வாளர்கள் தவிர எந்த மருந்தாய்வாளர்களும் மருந்துக்குக் கூட இத்தகு சோதனையில் ஈடுபடுவதில்லை என்பது தெரியவருகிறது!

அடுத்ததாக, பயன்பாட்டுத்தேதியை மாற்றியமைப்பதற்கு தயங்கும் சில ஸ்டாக்கிஸ்டுகள், புத்திசாலித்தனமாக பயன்பாட்டுத்தேதி பதியப்பட்டிருக்கும் மருந்துப் பகுதியை மட்டும் துண்டித்துவிட்டு மீதிப் பகுதியை மருந்துக்கடைக்கு திரும்பவும் வழங்குகிறார்கள். இதற்கு மருந்துக்கடை உரிமையாளர்களும் உடந்தையாக இருக்கிறார்கள்.

மருந்து விற்பனைப் பிரதிகள் தங்கள் தயாரிப்புகளைத் தள்ளி(!) விடுவதற்குப் பயன்படுத்தும் உத்திகள் அனைவரும் அறிந்ததே. தங்களது தயாரிப்புகளை வாங்கும் மருத்துவர்கள், மருந்துக்கடை உரிமையாளர்களை பரிசுப்பொருட்களின் மழையில் நனைய வைப்பதே இவர்களின் தலையாய கடமை! அரசாங்கத்தின் இலவசத் தொலைக்காட்சிகள் வழங்கும் திட்டத்தின் முன்னோடிகள் என்றும் இவர்களைச் சொல்லலாம்! ஆம், பெரும்பாலான மருத்துவமனைகளில் நாம் வேடிக்கை பார்க்கும் தொலைக்காட்சிகள் முதலாக பல்வேறு பொருட்களும் இவர்கள் தந்த அன்பளிப்புதான்! அதுமட்டுமின்றி,நான்கு மருந்துக் குப்பிகள் வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வகையிலும் பல்வேறுவிதமாக விற்பனை நடைபெறுகிறது. இப்படித் திணிக்கப்படும் மருந்துகளில் நோயாளிகள் எவ்விதம் தரத்தை எதிர்பார்க்க முடியும்?

இவையனைத்துமே மேலோட்டமான எனது விசாரிப்பினால் அறிந்துகொண்ட சில உண்மைகளே! மேலும் தகவல்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். தெரியாதவர்கள், இத்தகவலைப் பரவ விடுங்கள்! பிரதமருக்கு அனுப்பபடும் "ஏனோதானோ" தந்திகள் போலல்லாமல், உயிரோடிருப்பவர்கள் செத்ததாகப் பரவும் வதந்தி போல வேகமாக பரவட்டும்! உயிரோடிருக்கும் நாமெல்லாம் பிழைத்திருக்க, விழித்திருக்க உதவட்டும்!

Thursday, March 11, 2010

கல்லா கட்டத் தொடங்கி விட்டார்கள்!

இதோ நித்தியானந்தனின் பெயரால் அவரவருக்கு கல்லா கட்டும் பணி வெகுவிமர்சையாக தொடங்கி விட்டது! நேற்றுவரை நித்தியானந்தனை உலகைக்காக்க வந்த அவதாரமாக விளம்பரப்படுத்திய குமுதம் இன்றோ அவனது ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆச்சர்யக்குறியோடு விமர்சிக்கிறது! சகிக்கல சாமியோவ்!
அவரோட வீட்டுக்குள்ள அவர் குளிச்சிட்டு நிர்வாணமா வந்தாராம். அதை திருட்டு காமிராவில் பார்த்த குமுதம் ரிப்போர்ட்டருக்கு அதிர்ச்சியா இருந்ததாம். எவண்டா உன்னை அடுத்தவன் படுக்கை அறையை, குளியல் அறையை எட்டிப் பார்க்கச்சொன்னது? அப்படியே அவரோட கக்கூசையும் எட்டிப் பார்க்கறதுதான?? இன்னைக்கு எட்டிப் பார்த்த உனக்கு அவனைப் பற்றி பக்தித்தொடர் எழுதியபோது புத்தி எங்க போனது???
நித்தியானந்தனுக்கு இருபால் ஆசை இருக்குதுன்னு இன்னொரு அதிர்ச்சித்தகவல் சொல்றாங்க! அடுத்த வாரம், அவரு தெருநாயைக்கூட விட்டு வைக்கலைன்னும் சொல்வாங்க! அதிர்ச்சியோ அதிர்ச்சி!! ஆக மொத்தம் இப்போ இந்த நித்தியானந்தம் என்ன பண்ணினாலும் இவர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சிதான்!!! நித்தியானந்தத்தின் மீது அரசு நடவடிக்கை எடுப்பது தெரிந்துதான் இந்த மாதிரி மறைமுகமாக அப்ரூவராகும் முயற்சியில் பலரும் இறங்கி இருக்கிறார்கள்.
குமுதத்தை தொடர்ந்து எழுத்தாளர் சாருநிவேதிதா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் முயற்சியில், அதே குமுதம் ரிப்போர்ட்டரில் தொடங்கியிருக்கிறார்! இவரை எல்லோரும் ஹீரோவாக தலையில் வைத்துக் கொண்டாடும் ஜீரோ டிகிரியை இதுவரை நான் படித்ததில்லை, கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது இவர் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடங்கியிருக்கும் தொடரின் தொடக்கத்தைப் பார்த்ததுமே இவரது எழுத்து எவ்வளவு "ஜனரஞ்சகமாக" இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது!
தன்னை ஒண்ணுந்தெரியாத அப்பாவியாக காட்டிக்கொள்ள, தன்னை நித்தியானந்தனுக்கு அறிமுகப்படுத்திய நடிகை ராகசுதாவை, கூட்டிக்கொடுக்கும் மாமா வேலை பார்ப்பதற்கு ஒப்பாகச் சொல்லி, தான் மட்டும் தப்பிக்க முயற்சி செய்கிறார்! இவருக்கும் ராகசுதாவுக்குமான குறுஞ்செய்தி உரையாடலை வெளியிட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார். அப்பொழுதும்கூட சாமியாரின் மீதான "தொட்ட குறை, விட்ட குறை" அபிமானம் குறையாமல் காட்டிக்கொள்ள, நித்தியானந்தனின் தியானத்தை இப்பவும் புகழ்கிறார். "இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கும்போதுகூட நித்தியானந்தா எனக்குக் கற்பித்த நித்ய தியானம் என்ற அருமையான தியானத்தைச் செய்துவிட்டுத்தான் எழுதுகிறேன்." எனக் புகழும் இவருக்கு, ராகசுதாவை இகழ என்ன யோக்கியதை இருக்கிறது என்று புரியவில்லை!
அப்பாவி ஜனங்களோ, நடிகையோ சாமியாரிடம் மாட்டினால் அவர்களை நாறடிக்கும் ஊடகங்கள்,அதே சாமியாரிடம் பணம் பெற்றுக்கொண்டு, தன் வாசகர்களிடம் விளம்பரப்படுத்தி, வருமானம் பார்த்த ஒரு எழுத்தாளரை, மீண்டும் அதுகுறித்து தொடர் எழுத வைத்து, அதற்காக மீண்டும் அவருக்கு சன்மானம் வழங்குவதை நினைத்தால், "பலே! பத்திரிக்கை தர்மம்!" என புல்லரிக்க வைக்கிறது!!!

Wednesday, March 3, 2010

பத்திரிக்கையால் வாழ்ந்து கெட்ட நித்தியானந்தம்!

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!" எனும் பழமொழி, நித்தியானந்தாக்களால் ஊடகங்கள் பெரும் வளர்ச்சிக்கும், விளம்பரத்திற்கும் மிகவும் பொருந்தும்!

"யாரிந்த நித்தியானந்தா?"

"எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே!"

"குமுதம் புக்ல பார்த்திருக்கேன்!"

"குமுதம் புக்ல சூப்பரா ஒரு ஆன்மீகத்தொடர் எழுதிட்டு இருக்காரே!"

என்ற உரையாடல்கள் வாயிலாக, குமுதம் பத்திரிக்கையால் வெகுஜன மன்றத்தில் அறிமுகமாகி, தற்போது 33 நாடுகளில் 1500 கிளைகளுடன் (அவரது அடிப்பொடிகள் கணக்கு!) ஆழமாக வேரூன்றியுள்ள நித்தியானந்தனின் வளர்ச்சி புரியும்! இடையில், கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக இவனைப் பற்றி புகார் வந்தபோதும், நித்தியானந்தன் என்ற தனிமனிதனை ஊக்குவிக்கும் செயலை குமுதம் நிறுத்தவில்லை. சொல்லப்போனால், தற்போது நித்தியானந்தனின் ஆசிரமத்தை நோக்கி விழும் கற்கள், திசை மாறிய கற்களே!

"நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும்போது, கொஞ்சம் நாமளும்தான் மாறிக்கிட்டா அதுல தப்பேது?!", எனும் திரையிசைப் பாடலுக்கேற்ப, காலங்காலமாக பேயோட்டியும், குறி சொல்லியும், அருளாசி கொடுத்தும், மந்திர தந்திரங்கள் செய்தும், பிழைப்பு நடத்திய சாமியார்கள், காலத்திற்கேற்ப தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளத் தொடங்கி வருகிறார்கள்.

இதன் பலனாக சொற்பொழிவாற்றும் திறன் படைத்த பலரும், தங்களது திரு(!)நாமத்திற்கு முன்னும் பின்னும் சில எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டு கடவுளின் அவதாரமாகக் களமிறங்கத் தொடங்குகிறார்கள். இவர்களில் சிலர், உலக அமைதிக்காக பிரார்த்திப்பதும், மன அமைதிக்காக யோகாவை பயிற்றுவிப்பதுமாக தங்களை சமூகச்சிந்தனை கொண்ட சாமியாராகக் காட்ட முயற்சித்து வருகிறார்கள்! நித்தியானந்தன், ரவிஷங்கர், கல்கி பகவான், சிவசங்கர பாபா போன்ற குப்பைகள் அனைத்துமே இந்த ரகம்தான்.

மக்கள் மத்தியில் அறிமுகமாகும் முதல் இரண்டு, மூன்று வருடங்களுக்கு இவர்கள் தரும் பத்திரிக்கை விளம்பரங்கள், பேனர், சுவரொட்டி விளம்பரங்கள், கூட்டத்திற்கு ஆட்களை கூட்டி வருவது என அனைத்திலும் அக்மார்க் அரசியல்வாதிகளை மிஞ்சி விடுகிறார்கள். இப்படியே ஒருவழியாக, பணக்கார பக்தர்கள், சிலரை தன்வசப்படுத்தி பணங்கறந்து, ஆங்காங்கே ஆசிரமத்தின்பெயரால் நிலங்களை வாங்கிக் குவித்து, அரசியல்வாதிகள் சிலரையும் தன் கைக்குள் போட்டு, தனது செல்வாக்கை விரிவுபடுத்துகிறார்கள்.

பிறகென்ன, போலி செக்ஸ் டாக்டர்கள் பாணியில், விஜயம் செய்வதும், தரிசனம் தருவதுமாக ஒரே அமர்க்களம்தான் போங்கள்! அபரிமித வளர்ச்சிக்குப் பிறகு, சுனாமி நிதி வழங்குவதும், வீடு கட்டிக் கொடுப்பதும், மருத்துவமனை திறப்பதுமாக இந்த கேடிக் கும்பலின் சமுதாயச் சிந்தனை, படித்த வர்க்கத்தையும்கூட வியக்க வைக்கிறது!

"எவன் அப்பன் வீட்டுச் சொத்தை இவனுங்க இப்படி குடுக்குறாங்க?, இவனுங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது?, முற்றும் துறந்த சாமியாருக்கு எதுக்கு இத்தனை சொத்து, ஆடம்பர பங்களா, ஏசி வாகனம்?, சாமியார்களிடம் அப்படி என்னதான் நம்மை விட பெரிய சக்தி இருக்குது?, சமுதாய சேவை என்னும் பெயரில் இயக்கம் தொடங்கி, அதற்காக பணத்தை திரட்டும் முயற்சி, உண்மையில் எதற்காக?", இப்படி எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் சாமியார்களின் பின்னால் செல்லும் சமுதாயத்தின் போக்கு, அபாயகரமானது. "காக்கா உட்கார, பனம்பழம் விழுந்த" சொல்வாக்கு சாமியார்கள்தான் இங்கு உண்டென்பதை அனைவரும் உணர வேண்டும்!

"வெள்ளத்தனைய மலர்நீட்டம்" போல, இந்த சாமியார்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உறுதுணையாக இருந்துவரும் ஊடகங்களின் மீதும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆளுக்கு ஒரு சாமியாரைத் தத்து எடுத்துக் கொண்டு, அவர்களிடமிருந்து சில, பல லகரங்களை சன்மானமாகப் பெற்றுக் கொண்டு, கண்மூடித்தனமாக, அவர்களை ஆன்மீகத்தொடர் எழுதச் செய்வது கண்டனத்துக்குரியது. இன்றுவரை குமுதத்தில் ஆன்மீகத்தொடர் எழுதிய நித்தியானந்தன், நாளையே அப்ரூவராக மாறி, நக்கீரனில் "அஜால்குஜால்" தொடர் எழுதினாலும் ஆச்சர்யப்படுவதில்லை!

அம்பலப்படுத்துகிறேன் பேர்வழி என்ற பெயரில், படுக்கையறைக் காட்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி, தனது சமுதாயப் பொறுப்புணர்வைக் காட்டும் தொலைக்காட்சி, இலங்கைத் தமிழர் படுகொலைகளை, அரசுக்கு எதிரான போராட்டங்களை மட்டும் இருட்டடிப்பு செய்தது ஏன்? மூட நம்பிக்கையைப் பரப்பும் தொடர்களை ஒருபக்கம் ஒளிபரப்பிவிட்டு, மறுபக்கம் ஏன் இந்த சமுதாயப் பொறுப்புணர்வு வேடம்? சிந்திப்போம்... சிந்திப்போம்... ஆன்மீக மோசடிப் பேர்வழிகளைப் புறந்தள்ளுவோம்!