Monday, July 5, 2010

தீவிரவாத மலர்! - நாட்டு நடப்பு!

இன்றைய (மே 24, 2010) தினமலர், வாசகர் கடிதப் பகுதியில், கட்டம் கட்டிக் காட்டமாக எழுதப்பட்டிருந்த செய்தியில், தங்களது அடிப்படை உரிமைகளுக்காகச் சீன அரசை எதிர்த்துப் போராடிய மாணவர்களை புல்டோசர்களை மேலேற்றிக் கொன்றதுபோல, அனைத்து மாவோயிஸ்டுகளையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற கருத்து சொல்லப்பட்டிருந்தது. என்ன ஒரு தேசபக்தி!


அப்படியானால், மக்களுக்கு இடையூறு தரும் முறையில், அரசுக்கெதிராக அவ்வப்போது போராட்டம் நடத்தும் பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், போகுவரத்துத் தொழிலாளர்கள், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாணவர்கள் என அனைவருக்கும் இம்முறையிலேயே தண்டனை கொடுத்து விடலாமா?


அந்த லிஸ்டில் பாபர் மசூதியை இடிக்க வைத்து, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர்6ஆம் தேதியை ஒட்டி, பாதுகாப்பு எனும் பெயரில் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கிய அத்வானியும், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கொல்வதற்குக் கூட கூலிப்படை அனுப்பிய மாண்புமிகு நரேந்திர மோடியும் முதன்மையாக நிற்பார்களே! சம்மதம் தானா?!கர்ப்பிணி வயிற்றைக் கிழித்து என எழுதும் போதுதான் "உன்னைப் போல் ஒருவன்" கமலின் நினைவு வருகிறது. குஜராத் கலவரம் குறித்து உருகி, அழுது புரண்டு நடித்து, காசு அழுது படம் பார்த்த எங்களையும் அழ வைத்தீர்களே, ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டாமென நீங்களே உங்கள் நண்பர், திரு. அமிதாப் அவர்களை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் வேண்டிக்கொள்ளலாமே?


தெனாலியில் இலங்கைப் படையின் குண்டுவீச்சில் உயிரிழந்த தாயைப் பற்றி, ஒரே மூச்சில் பேசிக் கைதட்டல் வாங்கிய உங்களால் அங்கு நடந்து வரும் மனித உரிமை மீறலை உணர்த்திட முடியாதா என்ன? தனது தசாவதாரத்துக்காக ஜாக்கிசானை வரவழைத்து சிரிக்க வைத்த நீங்கள், கேவலம், மனிதர்களாய்ப் பிறந்துவிட்ட ஈழ மக்களுக்காக, இந்தித் திரையுலகை தடுத்திட முடியாதா என்ன?


அதுசரி, இம்முறை இந்தித் திரையுலகைத் தடுப்பதன்மூலம், கஜினி முகமது போல ஈழப் பகுதிகளின் மீது படையெடுக்கும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக வர்த்தக பெருநிறுவனங்களைத் தடுத்திடவா முடியும்? இதுபோன்ற எல்லை கடந்த தீவிரவாதம், தன்னாட்டு மக்களின் மீதே திணிக்கப்படுவது தானே மாவோயிஸ்டுகளையும், நக்சலைட்டுகளையும், விடுதலைப்புலிகளையும் உருவெடுக்கச் செய்கிறது?காடுகளை அழித்ததால்தானே இப்போது யானைகளும், சிறுத்தைப்புலிகளும் வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து நாசம் செய்கின்றன? பழங்குடி மக்களை, அவர்தம் வாழ்விடங்களை விட்டு விரட்டி விட்டு, தொழிலதிபர்களுக்கு அந்த நிலங்களைப் பட்டா போட்டுத் தருவது தீவிரவாதமா? மிதவாதமா? ஜனநாயகத்தைத் தோற்கடித்து வெற்றிபெற்ற உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம், தொழிலதிபர்களின் முந்தானைக்குள் ஒழிந்துகொண்டு, மாவோயிஸ்டுகளை ஒழிப்போமென ஊளையிடுகிறார்! வாழ்க ஜனநாயகம்!வரவிருக்கும் தேர்தலுக்குள் குடும்பத்திற்குள் மீண்டும் வெளிப்படையான பிளவு ஏற்படக்கூடாதென தன்னையும் பேராசிரியரையும் தவிர வேறு யாரும் பத்திரிக்கைகளுக்கு எந்த பேட்டியும் தரக்கூடாதென கலைஞர் கட்டளையிட்டார். புதிதாகச் சேர்ந்த குஷ்புவோ விஜயகாந்தைப் பற்றி காட்டமாகப் பத்திரிக்கை பேட்டி கொடுத்து பொளந்து கட்டுகிறார்! ஒருவேளை யாராவது இதுபற்றி கேட்டால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பேட்டி கொடுப்பதில் தவறில்லை, ஆனால் 'பாதுகாப்பான முறை'யில் பேட்டி தரவேண்டுமெனச் சொன்னாலும் சொல்லுவார்!குஷ்பு வந்தாலும் வந்தார், தேர்தல் கூட்டணி குறித்த அலம்பல்களை, மன்னிக்கவும், அலசல்களை அதிக விற்பனைப் பத்திரிக்கைகள் தொடங்கி விட்டன! 'திருதிரு'வளவன் திமுக கூட்டணியில் நீடிப்பாரா? அதிமுகவுக்குத் திரும்புவாரா? 'பல்டி புகழ்' பாமக திமுக பக்கமா? அதிமுக பக்கமா? எனப் பக்கம் பக்கமாக அனல் பறக்கும் கட்டுரைகள்! மக்களுக்கோ, புள்ளைக்கு பொறியியல் படிப்புக்கு எவ்வளவு அழணுமோ? மருத்துவப் படிப்புக்கு படிப்புக்கு எவ்வளவு அழணுமோ? என்ற ஜனநாயகக் குழப்பம்! வாழ்க குடியரசு!

No comments:

Post a Comment