Thursday, January 28, 2010

காமெடி - சாவடி! வேட்டிக்காரன் - திரைவிமர்சனம்

அடுத்ததா நாம, பன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் காமெடிப் படைப்பான "வேட்டிக்காரன்" படத்தோட திரைவிமர்சனத்தை பார்ப்போம்!
"நான் குடிச்சா தூங்கமாட்டேன்!
நாலு ரவுண்டு தாங்க மாட்டேன்!
வாந்தி எடுக்காம வீடுபோயி சேரமாட்டேன்!"
என்ற ஓப்பனிங் சாங்லயே கதாநாயகன் குஜய் தன்னோட காமெடியைக் காட்டியிருக்காரு!

ஏழைக்குடும்பத்தில் பிறந்த கதாநாயகனுக்கு வேட்டி வாங்கக்கூட பணமில்லாததால வெறும் டெர்பி கம்பெனி ஜுன்ஸை மாட்டிக்கிட்டு திரியராரு! அவரு ஆசைப்பட்ட மாதிரி வேட்டியை வாங்கினாராங்கறதுதான் படத்தோட கிளைமாக்ஸ்!

இந்தப் படத்தோட கதாநாயகியா 'ஃபோர்ஷா" நடிச்சிருக்காங்க! 'நறுக்"னு நாலு டூயட், மூணு மவுத் கிஸ், ரெண்டே ரெண்டு வசனம், சிங்கிள் பீஸ் டிரெஸ்னு தன்னோட பாத்திரத்தை உணர்ந்து தாராளமா நடிச்சிருக்காங்க!

படத்தோட நாயகன் குஜய், எந்த வேலைக்கும் போகாம, நாலஞ்சு காமெடி பீஸ்களை கூட வச்சுக்கிட்டு நாட்டுல நடக்குற அநியாயங்களை தட்டிக் கேக்குறாரு!படத்துல நாயகனோட மோதுறதுக்காக புதுசா அறிமுகமாகற வில்லன் பெயர் "ரோல் கேப்" ரங்கா! பெயருக்கேத்த மாதிரி எந்நேரமும் ரோல் கேப்பை உடம்பு முழுக்க சுத்திக்கிட்டே வந்து மிரட்டுறாரு!

ஒரு சீன்ல, குடிபோதையில வேட்டியை நழுவ விடுற வில்லனைப் பார்த்து, ''வேட்டி அவுந்துடுச்சு டோய்!"" என அலறும்போது, டால்பி சவுண்ட் எபக்ட்ல நமக்கே கொஞ்சம் அதிரத்தான் செய்யுது!

படத்துல பஞ்ச் டயலாக்குக்கும் பஞ்சமேயில்லை... ரோட்டோரமா பூ விக்கிற கிழவிகிட்ட, "நான் ஜவுளிக்கடையில மட்டும்தான் ஜவுளி எடுப்பேன்! உன்னோட பூக்கடையில இல்ல!" என்ற பஞ்ச் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது!

கிளைமாக்ஸில் "எலி உருட்டுது! எலி உருட்டுது!
அரிசிப் பானை "தடதட"ங்குது!", என்ற பாட்டுக்கு மொத்த தியேட்டரும் ஆடுவதை பார்க்க முடியுது! வில்லனை பறந்துவந்து மிதிப்பதற்காக நாயகன் குஜய் எகிறும்போது, அவரோட தலை நிலாவுல போய் முட்டுற மாதிரி காட்டுறது பிரமிக்க வைக்குது!
மொத்தத்தில், வேட்டிக்காரன்... ஹாலிவுட் படங்களுக்கு போட்டிக்காரன்!

Wednesday, January 13, 2010

வயக்காடு வாழ்த்துகிறது!

மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
யானை கட்டிப் போரடித்த கூட்டம்
இன்று
வீடு கட்டிப் போரடிக்கிறது
என் மேல்!

வயலும்
வயல் சார்ந்ததும் மருதம்...
தொழிலும்
தொழில் சார்ந்தோரும்
பிழைக்க
என் வயிற்றில்
'பாலை" வார்ப்பது
என்ன நியாயம்?

வறண்ட கோடுகளால்
இயற்கையன்னை வதைப்பது போதும்:
இல்லாத கோடுகளால்
தண்ணீர் இல்லாமல் செய்வது
என்ன கொடுமை?
அணைக்கட்டுகள்
என்னை அரவணைக்காததை
என்னவென்பது?
மொழிகளால்
பிரிந்த உங்களிடம்
எந்த மொழியில் வேண்டுவது?
என்னிடம்
ஆழப்பாய்ந்து நீரள்ளிப் பருகும்
வேரில்லை:
நீர்த்தாகம் தீர
உங்களை விட்டால்
கதி வேறில்லை!

பசுமை தந்தேன்
இன்று
சுமையாகிப் போனேன்!
என்னை
வருடிச் சென்ற தென்றல்
நெருடலாய் கேட்கிறது
ஏன் கம்பிகளாய்
மாறி வருகிறாயென்று!

ஏரு பூட்டி சேறு பூசி
என்னை
கிச்சுக்கிச்சுக்காட்டி
விளையாடிய நீங்களா
இன்று
உயிருடன் பிரேதப்பரிசோதனை செய்வது?

பெற்றவள் கைவிட்டாள்...
பெற்றவனோ
விற்றுவிற்று வெற்றிடமாக்கி
மீண்டும் விற்றுவிட்டான்!

இன்னமும் இருக்கிறேன்...
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்
சுடுகாடு இடுகாடுபோல்
தீண்டத்தகாத வயக்காடாக!

ஒரே ஆறுதல்:
பொங்கல் பண்டிகையை
இன்றுவரை
பெயர் மாற்றவில்லை...
செங்கல் பண்டிகையென்று!

Monday, January 4, 2010

எங்கண்ணே நீயுறங்கு! எங்கண்ணுமணி நீயுறங்கு!

"எங்கண்ணே நீயுறங்கு! எங்கண்ணுமணி நீயுறங்கு!
எம்பொன்னே நீயுறங்கு!..." எனத்தொடங்கி தாலாட்டுப் பாடத்தொடங்கினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எனது ஆச்சி சுந்தரத்தாயம்மாளின்(அம்மாவின் அம்மா) குரல்வளம் அப்படி! தனது பத்துக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தான் இறுதியாகக் கண்ணுறங்கும் வரை அவங்க தாலாட்டுப் பாடி உறங்க வைக்காத பேரக் குழந்தைகளே இல்லை எனலாம்.

தாலாட்டு என்று மட்டுமில்லாமல் அனைத்து வகையான நாட்டுப்புறப் பாடல்களிலும் முத்திரை பதித்தவர். சாமி கும்பிடும் வேளையில் கந்த சஷ்டி கவசம் தொடங்கி பல்வேறு பக்திப் பாடல்களையும் பாடி, பக்திப் பரவசத்திலும் மூழ்கி விடுவார். தெருப் பொங்கலென்று வந்தால், தானானே பாட்டுப் பாடுபவர்களுக்கு நடுவே மைக் பிடித்துப் பாடுவதும் இவங்க தான். குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது பாடும் நலங்குப் பாட்டு முதலாக, ஒப்பாரிப் பாடல்வரை அனைத்தும் பாட வல்லவர். அவங்க மறைவதற்கு முன்பாக, கடைசியாக, சென்னையில் வசிக்கும் எனது குழந்தையின் பெயர் சூட்டும் நிகழ்ச்சியின்போது, அப்போது பாட வேண்டிய நலங்குப் பாடலை செல்பேசி வாயிலாக அவங்களிடம் கேட்டறிந்து பாடினோம்.

அவங்க பிறந்த குடும்பத்திலும் அவங்க தான் முதல் குழந்தை. தான் பிறந்து வளர்ந்த காலத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்ததாக பெருமையுடன் தனது பிறந்த வீட்டை நினைவு கூறுவது இவங்க வழக்கம். நல்லா சாப்பிட்டு வளர்ந்ததால்தான் தன்னால் பத்து குழந்தைகள் பெற்ற பிறகும், இந்த வயதிலும் தெம்பாக வேலை செய்ய முடிவதாக அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்!.

தனது தாய்மாமனையே சொந்தத்திற்குள் மணமுடித்துக் கொண்டவர். எங்க தாத்தாவும் இவங்களும் சேர்ந்து, தனது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, சொந்தத்திலுள்ள பலருக்கும், தான் வசிக்கும் தெருவிலிருப்பவர்கள் பலருக்கும் முன்னின்று திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார்கள். எங்கள் சொந்தக்காரர்கள் வட்டத்தில் எங்க ஆச்சிதான் அச்சாணி மாதிரி. இதனால் எங்க தாத்தாவின் வீட்டையும் அனைவரும் "ஆச்சி வீடு" என்றுதான் அழைப்பது வழக்கம். ஏதேனும் விஷேசத்தின்போது உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டால் ஆச்சி வீடே அமர்க்களப்படும்! பகலில் கலகலப்பான அரட்டையோடு நின்றுவிடாமல் கண்டிப்பாக இரவில் நடுநிசிவரை சீட்டுக்கச்சேரி நடக்கும்! அதில் எங்க ஆச்சி தாத்தா இருவருமே கலந்து கொள்வது தான் ஹைலைட்!

மகிழ்ச்சியின்போது என்று மட்டுமில்லாமல், எங்கள் ஊரில் வெள்ளம் சூழ்ந்த போது உறவினர்கள் பலருக்கும் அடைக்கலம் தந்ததும் ஆச்சி வீடுதான். தனது உயிர் அடங்குவதற்கு முந்தைய நிமிடம்வரை மரணத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல், நன்கு நடமாடி, இறுதி நிமிடத்தில், தனது மகளின் வீட்டிலேயே உயிர் துறந்தவர். சாதி மதம் பாராமல் அனைத்துதரப்பு மக்களோடும் ஒன்றிப் பழகியவர். தெருவில், யார் வீட்டில் எந்த ஒரு சின்ன விஷேசமென்றாலும் ஆச்சிக்கு அழைப்பு வந்துவிடும்! அவங்களும் தவறாமல் கலந்துக்குவாங்க. அதனால்தான் தாத்தாவின் மறைவின்போது வந்த மக்கள் கூட்டத்தை விட ஆச்சியின் மறைவிற்கு வந்த கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக எனது ஆச்சி மறைந்தவுடன் அவங்க கண்களை தானம் செய்தோம். எங்கள் ஊரில் கண் தானம் செய்யும் மூன்றாவது நபர் எங்கள் ஆச்சிதான். அந்த வகையில், மறைவிற்குப் பிறகும் தனது கண்தானத்தினால், விழிப்புணர்வுச் சுடரேற்றியதாக எங்கள் ஆச்சியின் மீது எங்கள் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது!

Sunday, January 3, 2010

திருவான்மியூரில் பாட்சா!

கிரிக்கெட் பிரியர்கள் அனைவராலும் ரசிக்கத்தக்க நடுவர்களில் முதன்மையான இடத்தில் நியூஸிலாந்தைச் சேர்ந்த பில்லி பவுடன் இருக்கிறார். அவர் பவுண்டரி, சிக்ஸர்களுக்கு கையை ஆட்டும்விதமே அலாதியானது! அதுபோல ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸை இசைக்கும்போது ட்ரம்ஸ் ஸ்டிக்கை தூக்கிப்போட்டுப் பிடிப்பது கலக்கலாக இருக்கும்! இவர்களை நினைவுபடுத்தும் ஒரு நபர்தான் திருவான்மியூர் பகுதியில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றிவரும் சிவராமன் அவர்கள்.

இவரைப் பற்றிச் சொல்லுமுன் போக்குவரத்துக் காவலர்களைப் பற்றி ஒருசில விசயங்களைப் பகிர்ந்து கொள்வோம். போக்குவரத்துக் காவலர்கள் என்றாலே சாலை விதி மீறுவோரை ஓரங்கட்டிக் "கவனித்து" அனுப்புபவர்களாகத்தான் நம் அனுபவத்தில் காண முடியும். இவர்களுடைய பணியின் கடினத்தன்மையை நம்மால் உணர முடிவதில்லை.

சென்னை போன்ற பெருநகரங்களில் அடிக்கடி நிகழும் திடீர் போக்குவரத்து மாற்றங்களால் ஏற்படும் சாலை நெருக்கடிகளைச் சமாளிப்பது பெரும் சவாலான காரியம். சாலை நடுவே நின்றபடியே நாள் முழுவதும் வேலை செய்யும் இவர்களுக்கு "நெருக்கடி" வந்தால் ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதியும் இருப்பதில்லை. நிற்பதற்கான கூண்டும் பல சந்திப்புகளில் நிறுவப்படவில்லை.

அதுபோகட்டும். இனி சிவராமன் அவர்களைப் பற்றி...
திருவான்மியூர் பகுதியில் சாலையில் பயணிக்கும் பலரும் சிவராமனைக் கவனிக்கத் தவறுவதில்லை. பாட்சா படத்தில் வரும் "நீ நடந்தால் நடையழகு" என்ற பாடலின் இடையே நடிகர் ரஜினிகாந்த் போக்குவரத்துக் காவலர் போல வந்து சில நொடிகள் விதவிதமாக கைகளை ஆட்டி ரசிக்க வைப்பார். ஆனால் இந்த சிவராமனோ நாள் முழுதும் அதுபோல விதவிதமாக, வேகவேகமாக கைகளை ஆட்டி, போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் நேர்த்தி மிகமிக அழகு! இவரது சுறுசுறுப்பால் நெருக்கடியான போக்குவரத்தும் முடுக்கிவிடப்பட்டு ஒழுங்கான திசையில் வேகமெடுக்கும்! தனது பணியில் ஈடுபாட்டோடும், மாறுபட்டும் செயல்படும் இவரால் அவரது துறைசார்ந்த அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!

கொசுறாக ஒரு நகைச்சுவை:

" அந்த டிராபிக் போலீஸ் ரொம்ப பயந்த சுபாவம்"
"எப்படி சொல்ற?"
"சைரன் அடிச்சுகிட்டு ஆம்புலன்ஸ் கிராஸ் பண்ணினாக்கூட வெறப்பா நின்னு சல்யூட் அடிச்சு வழிவிடுவாரு!"