Wednesday, December 30, 2009

அரசியல்வாதிகள், புத்தாண்டு ஜோஸியம் சொல்றாங்க!

வரப்போற 2010ஆம் ஆண்டில், தங்கள் அரசியல் எப்படி இருக்குமென தமிழ்நாட்டின் முன்னணிக் கட்சித்தலைவர்களிடம் கேட்டபோது...
(பதில்களிலிருந்தே சொன்னவர் யாரென்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!)


அடுத்த ஆண்டிலிருந்து, எந்தக் கட்சி கூட்டணி அமைக்காமல் தேர்தலில் போட்டியிட முன்வருகிறதோ, அந்தக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்போமென தெளிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
------------------------

வரும் ஆண்டு, செம்மொழித் தமிழ் ஆண்டு! கனிமொழிக்காக புதிய வரலாறு எழுதவுள்ள செம்மொழி மாநாட்டு ஆண்டு! அடுத்து எங்களுடய இலக்கு, அனைவரும் மின்சாரம் இல்லாத நேரத்திலும் கவலையில்லாமல் பொழுதுபோக்க, இலவச தாயக்கட்டை, பல்லாங்குழி, சீட்டுக்கட்டு, கோலிக்குண்டுகளை வழங்குவதே என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
------------------------

இலவசங்களை அள்ளிக் கொடுத்து இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொண்டிருப்பவர்கள் வரும் ஆண்டில் பொதுத் தேர்தலைச் சந்திப்பது உறுதி! அதுவே அவர்களின் குடும்ப அரசியலுக்கு இறுதியாக அமையுமென்பதும் உறுதி! நான் ஓய்வெடுக்கவில்லை, ஒதுங்கியிருக்கவும் இல்லை... பதுங்கியிருக்கிறேன் என்பதை விரைவில் புரிய வைப்பேன் என சபதமெடுக்கிறேன்!
------------------------

மாமா நேருவின் கனவை, அவரது மகள், அன்னை இந்திரா காந்தியின் கொள்கையை, அவரது மகன் ராஜீவ் காந்தியின் லட்சியத்தை, அவர் மனைவி, அன்னை சோனியாகாந்தியின் ஆசியுடன், அவரது மகன் ராகுல்காந்தி வழி நடத்த, தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்து கோஷ்டிகளும் இணைந்து, அடுத்த ஆண்டில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து முடிவெடுக்க உள்ளதை அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் மேலிடப் பார்வையாளர் உங்களுக்கு இப்போது விளக்குவார்!
------------------------

இனி அடுத்த ஆண்டிலிருந்து இடைத்தேர்தல் என்பதே கூடாது என்ற முடிவினை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்! அப்படி இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தால் வாக்குச்சீட்டினைப் பயன்படுத்த வேண்டும். எங்களைப் போன்ற வளரும் கட்சிகளை திமுக, அதிமுக போன்ற வளர்ந்த கட்சிகள், கூட்டணிக்குள் சேர்க்காமல் தோற்கடிக்கச் சதி செய்வதை தேர்தல் ஆணையம் கண்டிக்க வேண்டும்! எங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் அடுத்த ஆண்டில் தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை!
------------------------

அடுத்த ஆண்டு கட்சி நடத்துறதா வேண்டாமான்னு கட்சி நடத்த நிதியுதவி செய்யுற என்னோட மனைவியை ஒரு வார்த்தை கேட்டுச் சொல்றேன்! அவங்க என்னோட அரசி மட்டுமில்லை, என்னோட செல்லமும்!
------------------------

வரப்போற ஆண்டு 2010! ஆட்சிக்கு வரப்போகுது ஆபத்து! இந்த டிஆர் வரப்போறான் இன்னொரு சுத்து!
நயந்தாரா குடுக்குறா பூங்கொத்து! ஆண்டவா! எம்பையனக் காப்பாத்து!
------------------------

Tuesday, December 29, 2009

கழுதை விரட்டு!

சிறு வயதில் நாம் செய்யும் குறும்புத்தனங்களை இப்போது அசைபோட்டுப் பார்ப்பது மிகவும் சுவாரசியமான விசயமாகும்! அதுவும் என்னை மாதிரி கிராமத்தானுக்கு நிறையவே விசயமிருக்கும்...

எங்க தெருப் பொங்கலில் திருவாதிரைத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். திருவாதிரை என்றாலே நடராஜரை சப்பரத்தில் வைத்து தூக்கிச் செல்வதுதான் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் எங்களது சுவாரசியமெல்லாம் திருவாதிரைக்கு முந்தின நான் இரவு கொண்டாட்டம் தான்! ஆம்; திருவாதிரைக்கு முதல்நாள் இரவு சப்பரத்தை பூவால் ஜோடிக்கும் வேலை இரவு முழுக்க நடக்கும். அந்த மாதிரி வேலைகளை என் போன்ற சிறுவர்களை வைத்துதான் செய்து முடிப்பார்கள்! இரவு, நேரம் செல்லச் செல்ல, ஒவ்வொருவராக நைஸாக அங்கிருந்து நகர்ந்து நகர்வலம் தொடங்குவோம்! அதன்பின்புதான் சுவாரஸ்யமே!

எங்கள் குழுவுக்கு நண்பன் பழனிதான் லீடர்!(இப்போ அவன் அமெரிக்காவில் அலப்பரையை கட்டிக்கிட்டு இருக்கிறான்!) இரவினைச் சுமந்தபடி கழுதைகள் நிறைய ஆங்காங்கே திரியும்... அவைதான் எங்கள் முதல் இலக்கு! ஒவ்வொரு கழுதையாக மிரட்டி, அதட்டி, விரட்டியதில் எதாவது ஒரு சோப்லாங்கிக் கழுதை எங்கள் கைகளில் மாட்டும்! உடனே ஒரு கொச்சக் கயிற்றால் அதற்கு கடிவாளம் போட்டு அமுக்கி, அதன்மீது ஒருவனை ஏற்றிவிட்டு(நாங்க உஷார்! நாங்க ஏற மாட்டோம்!)அந்த கழுதையை வாலை முடுக்கி விரட்டுவோம்! அது தலை தெறிக்க ஓடி எங்காவது அவனை கீழே தள்ளி விட்டு தப்பிச்செல்லும்!

அடுத்து எங்கள் இலக்கு வாழைப்பழம்! திருவாதிரைக்குப் போடும் பந்தல் மிகவும் உயரமாக, சற்று வலுவாக இருக்கும். அப்பந்தலின் முகப்பில் மிகவும் உயரமான வாழை மரங்களைக் கட்டி வைப்பதுதான் வழக்கம். அதன் வாழைக்குலையும் மிகவும் பெரிதாக அடர்த்தியாக நிறைய காய்களுடன் தலைகவிழ்ந்து எங்களைப் பார்த்து "வந்து பறித்துச் செல்லுங்கள்!" என அழைப்பது போல பரிதாபமாக நிற்கும்! நாங்களும் அதன் அழைப்பை நிராகரிக்காமல் வாழைப்பழத்தை(அது பழமாக கூட இருக்காது! அரைப்பழமாகத்தான் இருக்கும்!) பறிக்க திட்டம் வகுப்போம்! அந்த கோவில் சாவடியின் மொட்டை மாடிக்குத் தாவி ஏறி, பின்பு மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து பந்தலின் முகப்புக்கு வருவோம். பின்பு எடை குறைவான ஒருவனை பந்தலின் வழியாக நடக்கவைத்து வாழைப்பழங்களை பிடுங்கி எறிய வைப்போம்! கீழே சப்பர வேலை செய்பவர்களுக்குத் தெரியாமல் சாமர்த்தியமாகத் திருடித் தின்னும்போது, அந்த அரைப்பழமும்கூட இனிப்பாகவே இருக்கும்!

அதற்குப் பிறகும் தூக்கம் வராமலிருக்க, நடுத்தெருவில், விளக்கு வெளிச்சத்தில் ஒளிந்து விளையாடுவோம். அந்த சமயத்தில் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்குபவர்களை உசுப்பி விட்டு ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கும் வேலையும் நடக்கும்! விடிய விடிய தூங்காமல் இருந்தாலும், மறுநாள் சப்பரம் தூக்கும்போது, சப்பரத்தின் முன்பாக கலர் கலர் கொடிகளைத் தூக்கிச் செல்வதற்கு பெரிய போட்டியே நடக்கும்! சப்பரம் சுற்றி வந்து நின்றபிறகுதான் எங்கள் குழு கலையும்!!!

இப்போதும் திருவாதிரை நடப்பதை பார்க்கிறேன்... சப்பரத்தை வண்டியில் இழுத்துச் செல்கிறார்கள்... தூக்கிச் செல்வதில்லை. முன்னால் கொடி பிடித்துச் செல்லும் கூட்டத்தைக் காணவில்லை. பஜனை கோஷ்டியிலும் ஆட்கள் குறைவு.(நான் பஜனையும் பாடிச் சென்றிருக்கிறேன்!) இப்போது இதுமாதிரி சின்னச் சின்ன கொண்டாட்டங்களையும் சிறுவர்கள் தொலைக்காட்சி மோகத்தால் இழந்துவிட்டார்களா? அல்லது கிரிக்கெட் மோகத்தால் விலகிச் சென்று விட்டார்களா என்பது அந்த நடராஜருக்குத்தான் தெரியும்!

Monday, December 28, 2009

என்ன டுமைக்கொ வணன்சரா!

தலைப்பு புரியலையாங்க? எனக்கும் ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தது... மேல படிங்க, நீங்களும் இப்படிப் பேசத் தொடங்கிடுவீங்க!

தீப்பெட்டி இருக்கா? குதிரைக்கு எத்தனை காலு?! என எஸ்.வீ.சேகர் படத்தில் சங்கேத வார்த்தைகள் பயன்படுத்துவதை கேட்டுச் சிரித்திருப்போம். இப்படி சங்கேத வார்த்தைகள் பயன்படுத்துவதில் இன்னொரு வகைதான் அடுத்தவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அதன்மூலமாக அவரைப் பற்றி கிசுகிசு (நம்ம தமிழில் பொரணி)பேசுவது! மிகவும் சுவாரசியமாக வீடு, அலுவலகம் என அனைத்து மட்டத்திலும் இந்த பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது! (கொசுறு: இந்த வழக்கம், மன்னர் காலத்திலிருந்தே இருந்து வருவதை கல்வெட்டுகள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது!)

இந்த கிசுகிசுவில் சற்று மேம்பட்ட முறையாக, எனது அலுவலகத் தோழி, இன்னொரு வகை பேச்சுவழக்கு முறையை செயல்படுத்தி வருகிறார். இதன் சூத்திரம், எந்த வார்த்தையையும் இரண்டாகப் பிளந்து முன்பின் மாற்றி ஒட்டி பயன்படுத்துவது தான்! (இந்நேரத்தில் உங்களுக்கு விவேக் காமெடி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) இதன்படியாக கவுதம் என்ற எனது பெயர் தம்கவ் என்றாகி விடும். சீனி என்ற பெயர் னிசீ என்றாகி விடும்! இதுபோலவே, "நீ வெட்டியா இருக்கியா" என்பதை "நீ டிவெட்டா?" எனக் கேட்பது மிகவும் சகஜம்! திமிர் என்ற வார்த்தை கூட மிர்த்தி என்றாகும்! "உனக்கு ரொம்ப மிர்த்திப்பா!"

இதுமாதிரி பேசுவது குறிப்பிட்ட சில நண்பர்கள் வட்டத்துக்குள் நடக்குமென்பதால் "கிசுகிசு" பேசுவதே கலகலப்பான விசயமாக இருக்கும்! முதலில் இப்படிப் பேசுவது கடினமாக தோன்றினாலும் தொடர்ந்து பேசினால் சுலபமாக கற்றுக்கொள்ளலாம்! இப்போது உங்களுக்கு தலைப்பு புரிந்திருக்குமே! எங்கே, நீங்களும் கொஞ்சம் ப்ரீட்சித்துப் பாருங்களேன்! :)

குறும்படம் எடுக்கப் போறோம்!

தொழில்முறை இயக்குனர்கள் என்றில்லாமல், கையில் கேமரா அல்லது கதையுடன் திரியும் அனைவராலும் ஓரளவு வெற்றிகரமாக எடுக்க சாத்தியப்படும் ஒரு ஊடகமாக குறும்படங்களை இப்போது காண முடிகிறது. ஆனால் பெரும்பாலும் தற்போதைய வாரப் பத்திரிக்கைகளின் "ஒரு நிமிடக்கதை" போல பல குறும்படங்கள், அந்த நேரத்தில் "அட" போட வைத்துவிட்டு மறு நிமிடமே நமது நினைவை விட்டு நீங்கி விடுகின்றன.

நான் மிகவும் ஒன்றிப் பார்த்த முதல் குறும்படம் "கர்ணமோட்சம்". ஆர்குட் நண்பர்களின் கலந்துரையாடல் நிகழ்வின்போது திரையிடப்பட்டு காண நேர்ந்தது. நாட்டுப்புறக் கூத்துக் கலையின் அழிவு குறித்து மிகவும் நேர்த்தியாக மனதில் வலி ஏற்படுத்தும் விதமாக அதன் காட்சிகள் அமைந்திருக்கும். அடுத்ததாக "திற" என்ற குறும்படம், கரசேவகர்(!)களின் மதவெறியை வெட்டவெளிச்சமாக்கி இருந்தது. இந்நேரத்தில், ஆர்குட்டில் நான் பார்த்து ரசித்த "மறைபொருள்" குறும்படம் பற்றியும் சொல்லியாக வேண்டும். இஸ்லாமிய சமூகத்தில் "பர்தா" அணியும் பழக்கவழக்கத்தை சாடுவதாக இக்குறும்படம் அமைந்திருக்கும். அதை மவுனமாகச் சொல்லிய விதம்தான் அருமை.

சென்ற வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று பெரியார் திடலில் நடைபெற்ற குறும்படப்போட்டியில் பார்வையாளனாகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. திடீரென வந்த அழைப்பால், சற்று தாமதமாக அங்கு செல்ல நேர்ந்தது. இருப்பினும், என்னைச் சிந்திக்க வைத்த, அதிர்வடைய வைத்த இரண்டு குறும்படங்களைப் பார்க்க நேர்ந்தது.

"ப்ளைன் சீதா"(Plain sita) என்ற குறும்படம், மேல்த்தட்டு குடும்பத்தில், "பணக்கார பெற்றோர், பொறுப்பற்ற பிள்ளை," இவர்களுக்கிடையே நடக்கும் வாழ்க்கை தடுமாற்றங்களை போட்டு உடைப்பதாக இருக்கிறது. அப்பாவையும், பின்பு கணவனையும் சார்ந்து வாழாமல், தன் சுய உழைப்பில் வாழப் பழக வேண்டியதை தற்கால நடைமுறை, நகர்ப்புற வாழ்வியல் முறைகளை வைத்து விவரித்திருக்கிறார்கள். படம் முற்றுப் பெற்றதைப் போல இருந்தாலும் முற்றுப்பெறாத கேள்விகள் நம்மைத் தொடர்கின்றன! இதைப் போலவே அரவாணிகளின் வாழ்க்கை அவலத்தைப் போட்டுடைக்கும் "மிஸ்ஸிங் கலர்ஸ்"(Missing colors) மலையாளக் குறும்படமும் நம்முள் கேள்வியை விதைக்கின்றது. வயதான அரவாணியாக வாழ்ந்திருப்பவரிடம் கற்றுக்கொள்ள நிறைய நடிப்புத் திறமை இருக்கிறது. வாலிப வயதுள்ள அரவாணிகளிடம் தனது இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் எச்சில் சமூகத்தில், மூப்படைந்த பின்பு அவர்களால் எப்படி வாழ்க்கையை நகர்த்த முடிகிறது? என்ற கேள்வியே என்னுள் எழுந்த முதல் கேள்வி.

எனது நண்பன் குறும்படம் எடுக்கும் ஆர்வத்தில் கேமரா மற்றும் கதைக்கருவுடன் என்னைக் கலந்தாலோசித்து வருகிறான். நாங்கள் குறும்படம் எடுப்பதாக இருந்தால் கண்டிப்பாக இப்படங்களின் பாதிப்பு எங்களை பலப்படுத்த, அறிவை வளப்படுத்த உதவும்...