Monday, March 29, 2010

கசக்கும் மருந்துகள் - ஓர் எச்சரிக்கை!


ஒரு நகைச்சுவை:

"அந்த மருந்துக்கடைக்குள்ள தொல்பொருள்த்துறையினர் ஆராய்ச்சி பண்றாங்களாமே?"

"ஆமா, அங்க 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மருந்து மாத்திரையெல்லாம் கண்டெடுத்தாங்களாம்!"

இனி விஷயத்திற்கு வருவோம்!

சிறிய தலைவலிக்கும், பல்வலிக்கும் மருத்துவமனை சென்று டோக்கன் பெற்று, காத்திருந்து, மருத்துவருக்குக் கட்டணம் செலுத்திய பின்பு மருந்து மத்திரை வாங்கப் பொருளாதார வசதியும் வருமானமும் இல்லாத மக்கள் கூட்டம் பெருகிவரும் இன்றைய சூழலில், மருந்துக்கடைகளின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதை உணர்ந்த மருந்து விற்பனையாளர்கள் கூட்டமோ, மக்களின் இயலாமையையும், அறியாமையையும் வெகுசுலபமாக காசாக்கி வருகிறது!

அண்மையில் குப்பையில் கொட்டப்பட்ட பயன்பாட்டு(Expiry Date) நாள் முடிந்த மருந்து மாத்திரைகளைக் கைப்பற்றி மீண்டும் பயன்பாட்டு நாளைப் புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டுவரும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து நாம் அறிந்த, அறியாத உண்மைகளைப் பற்றி விவரங்கள் சேகரித்ததில் மருந்து விற்பனையாளர் கூட்டத்தின் சங்கிலித்தொடர் ஏமாற்று வேலைகளை அறிய முடிந்தது.
நான் மேலும் குப்பையைக் கிளறியதில் கிடைத்த சில தகவல்களை இங்கு வரிசைப்படுத்துகிறேன்.முதலாவதாக, ஒரு மருந்துக்கடை தொடங்க வேண்டுமென்றாலே அதற்கான விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடித்து கடை நடத்த வேண்டும். உதாரணம்: கடை முழுவதும் குளிர்சாதன வசதி செய்திருக்க வேண்டும். ஆனால் இதனை ஆய்வு செய்யும் மருந்து ஆய்வாளரோ(Drug Inspector) ஆய்வு செய்யாமலேயே கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதி அளித்து விடுகிறார். ஏதோ ஓர் இணைய மையத்திலிருந்து குடியரசுத் தலைவருக்கு மொட்டையாக ஈமெயில் மிரட்டல் வந்த காரணத்தால், இன்று இணைய மையங்கள் அனைத்திலும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் அன்றாட மக்களின் உயிர்நாடிப் பிரச்சனையில் எவ்வளவு மெத்தனப்போக்கு!

சென்னையில் மட்டும் 4000ற்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் உள்ளன. இவற்றில் 300லிருந்து 400 கடைகள் மட்டுமே மருந்தாளுநர் பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்படுகிறன. மற்ற கடைகள் அனைத்திலும், ராமாயணக் கதையில், ராமனின் காலணியை வைத்து பரதன் நாடாண்டதுபோல, மருந்தாளுனரின் வெறும் கையெழுத்தை மட்டுமே வைத்து, மக்களின் தலையெழுத்து தீர்மானிக்கப்படுகின்றது!

மருந்தாளுனருக்குக்கூட மாதச்சம்பளம் கொடுக்க இயலாத பரிதாப நிலையிலா இத்தனை மருந்துக்கடைகள் நடத்தப்படுகின்றன? இல்லவே இல்லை! விற்பனை செய்யப்படும் அனைத்து மருந்து மாத்திரைகளுமே 50% முதல் 1000%ற்கும் மேலான லாபம் வைத்தே விற்பனைக்கு வருகின்றன. உதாரணமாக, அதிகமாக விற்பனையாகும் செட்ரிசைன்(CETRIZINE) என்ற மாத்திரையின் தயாரிப்புச் செலவு 10 பைசாவிற்கும் குறைவே. அது அடுத்தகட்டமாக, ஸ்டாக்கிஸ்டுகளால்(பதுக்கல்காரர்கள் என்றும் அன்புடன் அழைக்கலாம்!) வாங்கப்பட்டு, 30 பைசாவிற்கு சில்லரை விற்பனையாளர்களிடம் விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையாளர்களோ இவற்றை 3 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்பனை செய்கிறார்கள். லாப சதவிகிதத்தை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்!

இப்படி ஸ்டாக்கிஸ்டுகளிடம் வாங்கப்பட்ட மருந்து மாத்திரைகளின் பயன்பாட்டு நாள் நிறைவடைந்தால் ஸ்டாக்கிஸ்டுகளிடமே திருப்பித் தரப்படும். அவற்றை தண்ணீரில் கரைத்தோ, தீயிட்டோ அழிப்பதுதான் மருந்து விற்பனை விதிமுறை. ஆனால் இந்த விதிமுறையை ஏமாற்றித்தான் தில்லுமுல்லுகள் இங்கே நடக்கின்றன.

காலாவதியான மருந்துகளை உரிய நிறுவனங்களிடம் ஸ்டாக்கிஸ்டுகள் ஒப்படைத்தால் மிகக் குறைவான தொகைதான் திரும்பக் கிடைக்கும். இதைத் தவிர்க்க இந்த ஸ்டாகிஸ்டுகள், காலாவதியான மருந்துகளின் பயன்பாட்டுத் தேதியை மாற்றியமைத்து மறுவிற்பனைக்கு அனுப்புகிறார்கள். இதற்கு மருந்து ஆய்வாளர்களும் உடந்தை. மாதாமாதம் மருந்துகளின் இருப்பு குறித்து விவரத்தை ஆராய்ந்து கணக்கெடுப்பது மருந்து ஆய்வாளர்களின் கடமை. ஒருசில பெண் ஆய்வாளர்கள் தவிர எந்த மருந்தாய்வாளர்களும் மருந்துக்குக் கூட இத்தகு சோதனையில் ஈடுபடுவதில்லை என்பது தெரியவருகிறது!

அடுத்ததாக, பயன்பாட்டுத்தேதியை மாற்றியமைப்பதற்கு தயங்கும் சில ஸ்டாக்கிஸ்டுகள், புத்திசாலித்தனமாக பயன்பாட்டுத்தேதி பதியப்பட்டிருக்கும் மருந்துப் பகுதியை மட்டும் துண்டித்துவிட்டு மீதிப் பகுதியை மருந்துக்கடைக்கு திரும்பவும் வழங்குகிறார்கள். இதற்கு மருந்துக்கடை உரிமையாளர்களும் உடந்தையாக இருக்கிறார்கள்.

மருந்து விற்பனைப் பிரதிகள் தங்கள் தயாரிப்புகளைத் தள்ளி(!) விடுவதற்குப் பயன்படுத்தும் உத்திகள் அனைவரும் அறிந்ததே. தங்களது தயாரிப்புகளை வாங்கும் மருத்துவர்கள், மருந்துக்கடை உரிமையாளர்களை பரிசுப்பொருட்களின் மழையில் நனைய வைப்பதே இவர்களின் தலையாய கடமை! அரசாங்கத்தின் இலவசத் தொலைக்காட்சிகள் வழங்கும் திட்டத்தின் முன்னோடிகள் என்றும் இவர்களைச் சொல்லலாம்! ஆம், பெரும்பாலான மருத்துவமனைகளில் நாம் வேடிக்கை பார்க்கும் தொலைக்காட்சிகள் முதலாக பல்வேறு பொருட்களும் இவர்கள் தந்த அன்பளிப்புதான்! அதுமட்டுமின்றி,நான்கு மருந்துக் குப்பிகள் வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வகையிலும் பல்வேறுவிதமாக விற்பனை நடைபெறுகிறது. இப்படித் திணிக்கப்படும் மருந்துகளில் நோயாளிகள் எவ்விதம் தரத்தை எதிர்பார்க்க முடியும்?

இவையனைத்துமே மேலோட்டமான எனது விசாரிப்பினால் அறிந்துகொண்ட சில உண்மைகளே! மேலும் தகவல்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். தெரியாதவர்கள், இத்தகவலைப் பரவ விடுங்கள்! பிரதமருக்கு அனுப்பபடும் "ஏனோதானோ" தந்திகள் போலல்லாமல், உயிரோடிருப்பவர்கள் செத்ததாகப் பரவும் வதந்தி போல வேகமாக பரவட்டும்! உயிரோடிருக்கும் நாமெல்லாம் பிழைத்திருக்க, விழித்திருக்க உதவட்டும்!

No comments:

Post a Comment