Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Wednesday, August 11, 2010

"பன்ச்" பழனிச்சாமி சிந்தனைகள்!

அதிரடி தீர்ப்பு: சுதந்திரப் போராட்ட தியாகியை அவமதித்த மத்திய காங்கிரஸ் அரசுக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


அதிரடி கேள்வி: அந்த 50,000 ரூபாய் நோட்டுகளிலிருக்கும் காந்தி சிரிப்பாரா?

------------------------------

நெல்லை அண்ணா பல்கலை கழக பட்டமளிப்பு விழாவின்போது, தன்னை திமுக எம்.எல்.ஏ. மாலைராஜா உள்பட 4 பேர், உருட்டுகட்டையுடன் துணைவேந்தர் அறைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் தேவதாஸ் தெரிவித்தார்.


"உடற்கல்வி இயக்குனர் நல்ல உடல்பலத்துடன் இருக்கிறாரா என்பதை சோதித்துப் பார்க்கவே இந்த உருட்டுக்கட்டை ...அடி கொடுக்கப்பட்டது என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!"

------------------------------

தா.பாண்டியன் சொன்னது:தமிழக அரசு அறிவித்தபடி, அரசு கேபிள் டிவி முறையாக செயல்பட ஆரம்பித்தால், நாங்களே முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுப்போம்!
தா.பாண்டியன் சொல்லாதது: அப்படியே "கேபிள்கொண்டான்" என்ற பட்டமும் வழங்குவோம்!

------------------------------


வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். - செய்தி


விஜயகாந்த்: எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "கூட்டணி"
ராமதாஸ்: எனக்கு தமிழ்நாட்டில் பிடிக்காத ஒரே வார்த்தை "விஜயகாந்த்"
விஜயகாந்த் & ராமதாஸ்: எங்க ரெண்டு பேருக்கும் தமிழில் பிடித்த ஒரே வார்த்தை "பச்சோந்தி"

------------------------------

உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட கண் பார்வையற்றோரை, புழல் சிறையில் அடைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, நள்ளிரவில், சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக எல்லோரையும் நடுரோட்டில் இறக்கி விட்டு, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டி அனுப்பியுள்ளனர். - வைகோ


கண் தெரியாதவர்கள் - மாற்றுத் திறனாளிகள்

காவல்துறை - ஏமாற்றுத் திறனாளிகள்!

Thursday, January 28, 2010

காமெடி - சாவடி! வேட்டிக்காரன் - திரைவிமர்சனம்

அடுத்ததா நாம, பன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் காமெடிப் படைப்பான "வேட்டிக்காரன்" படத்தோட திரைவிமர்சனத்தை பார்ப்போம்!
"நான் குடிச்சா தூங்கமாட்டேன்!
நாலு ரவுண்டு தாங்க மாட்டேன்!
வாந்தி எடுக்காம வீடுபோயி சேரமாட்டேன்!"
என்ற ஓப்பனிங் சாங்லயே கதாநாயகன் குஜய் தன்னோட காமெடியைக் காட்டியிருக்காரு!

ஏழைக்குடும்பத்தில் பிறந்த கதாநாயகனுக்கு வேட்டி வாங்கக்கூட பணமில்லாததால வெறும் டெர்பி கம்பெனி ஜுன்ஸை மாட்டிக்கிட்டு திரியராரு! அவரு ஆசைப்பட்ட மாதிரி வேட்டியை வாங்கினாராங்கறதுதான் படத்தோட கிளைமாக்ஸ்!

இந்தப் படத்தோட கதாநாயகியா 'ஃபோர்ஷா" நடிச்சிருக்காங்க! 'நறுக்"னு நாலு டூயட், மூணு மவுத் கிஸ், ரெண்டே ரெண்டு வசனம், சிங்கிள் பீஸ் டிரெஸ்னு தன்னோட பாத்திரத்தை உணர்ந்து தாராளமா நடிச்சிருக்காங்க!

படத்தோட நாயகன் குஜய், எந்த வேலைக்கும் போகாம, நாலஞ்சு காமெடி பீஸ்களை கூட வச்சுக்கிட்டு நாட்டுல நடக்குற அநியாயங்களை தட்டிக் கேக்குறாரு!படத்துல நாயகனோட மோதுறதுக்காக புதுசா அறிமுகமாகற வில்லன் பெயர் "ரோல் கேப்" ரங்கா! பெயருக்கேத்த மாதிரி எந்நேரமும் ரோல் கேப்பை உடம்பு முழுக்க சுத்திக்கிட்டே வந்து மிரட்டுறாரு!

ஒரு சீன்ல, குடிபோதையில வேட்டியை நழுவ விடுற வில்லனைப் பார்த்து, ''வேட்டி அவுந்துடுச்சு டோய்!"" என அலறும்போது, டால்பி சவுண்ட் எபக்ட்ல நமக்கே கொஞ்சம் அதிரத்தான் செய்யுது!

படத்துல பஞ்ச் டயலாக்குக்கும் பஞ்சமேயில்லை... ரோட்டோரமா பூ விக்கிற கிழவிகிட்ட, "நான் ஜவுளிக்கடையில மட்டும்தான் ஜவுளி எடுப்பேன்! உன்னோட பூக்கடையில இல்ல!" என்ற பஞ்ச் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது!

கிளைமாக்ஸில் "எலி உருட்டுது! எலி உருட்டுது!
அரிசிப் பானை "தடதட"ங்குது!", என்ற பாட்டுக்கு மொத்த தியேட்டரும் ஆடுவதை பார்க்க முடியுது! வில்லனை பறந்துவந்து மிதிப்பதற்காக நாயகன் குஜய் எகிறும்போது, அவரோட தலை நிலாவுல போய் முட்டுற மாதிரி காட்டுறது பிரமிக்க வைக்குது!
மொத்தத்தில், வேட்டிக்காரன்... ஹாலிவுட் படங்களுக்கு போட்டிக்காரன்!

Wednesday, December 30, 2009

அரசியல்வாதிகள், புத்தாண்டு ஜோஸியம் சொல்றாங்க!

வரப்போற 2010ஆம் ஆண்டில், தங்கள் அரசியல் எப்படி இருக்குமென தமிழ்நாட்டின் முன்னணிக் கட்சித்தலைவர்களிடம் கேட்டபோது...
(பதில்களிலிருந்தே சொன்னவர் யாரென்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!)


அடுத்த ஆண்டிலிருந்து, எந்தக் கட்சி கூட்டணி அமைக்காமல் தேர்தலில் போட்டியிட முன்வருகிறதோ, அந்தக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்போமென தெளிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
------------------------

வரும் ஆண்டு, செம்மொழித் தமிழ் ஆண்டு! கனிமொழிக்காக புதிய வரலாறு எழுதவுள்ள செம்மொழி மாநாட்டு ஆண்டு! அடுத்து எங்களுடய இலக்கு, அனைவரும் மின்சாரம் இல்லாத நேரத்திலும் கவலையில்லாமல் பொழுதுபோக்க, இலவச தாயக்கட்டை, பல்லாங்குழி, சீட்டுக்கட்டு, கோலிக்குண்டுகளை வழங்குவதே என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
------------------------

இலவசங்களை அள்ளிக் கொடுத்து இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொண்டிருப்பவர்கள் வரும் ஆண்டில் பொதுத் தேர்தலைச் சந்திப்பது உறுதி! அதுவே அவர்களின் குடும்ப அரசியலுக்கு இறுதியாக அமையுமென்பதும் உறுதி! நான் ஓய்வெடுக்கவில்லை, ஒதுங்கியிருக்கவும் இல்லை... பதுங்கியிருக்கிறேன் என்பதை விரைவில் புரிய வைப்பேன் என சபதமெடுக்கிறேன்!
------------------------

மாமா நேருவின் கனவை, அவரது மகள், அன்னை இந்திரா காந்தியின் கொள்கையை, அவரது மகன் ராஜீவ் காந்தியின் லட்சியத்தை, அவர் மனைவி, அன்னை சோனியாகாந்தியின் ஆசியுடன், அவரது மகன் ராகுல்காந்தி வழி நடத்த, தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்து கோஷ்டிகளும் இணைந்து, அடுத்த ஆண்டில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து முடிவெடுக்க உள்ளதை அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் மேலிடப் பார்வையாளர் உங்களுக்கு இப்போது விளக்குவார்!
------------------------

இனி அடுத்த ஆண்டிலிருந்து இடைத்தேர்தல் என்பதே கூடாது என்ற முடிவினை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்! அப்படி இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தால் வாக்குச்சீட்டினைப் பயன்படுத்த வேண்டும். எங்களைப் போன்ற வளரும் கட்சிகளை திமுக, அதிமுக போன்ற வளர்ந்த கட்சிகள், கூட்டணிக்குள் சேர்க்காமல் தோற்கடிக்கச் சதி செய்வதை தேர்தல் ஆணையம் கண்டிக்க வேண்டும்! எங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் அடுத்த ஆண்டில் தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை!
------------------------

அடுத்த ஆண்டு கட்சி நடத்துறதா வேண்டாமான்னு கட்சி நடத்த நிதியுதவி செய்யுற என்னோட மனைவியை ஒரு வார்த்தை கேட்டுச் சொல்றேன்! அவங்க என்னோட அரசி மட்டுமில்லை, என்னோட செல்லமும்!
------------------------

வரப்போற ஆண்டு 2010! ஆட்சிக்கு வரப்போகுது ஆபத்து! இந்த டிஆர் வரப்போறான் இன்னொரு சுத்து!
நயந்தாரா குடுக்குறா பூங்கொத்து! ஆண்டவா! எம்பையனக் காப்பாத்து!
------------------------

Tuesday, December 29, 2009

கழுதை விரட்டு!

சிறு வயதில் நாம் செய்யும் குறும்புத்தனங்களை இப்போது அசைபோட்டுப் பார்ப்பது மிகவும் சுவாரசியமான விசயமாகும்! அதுவும் என்னை மாதிரி கிராமத்தானுக்கு நிறையவே விசயமிருக்கும்...

எங்க தெருப் பொங்கலில் திருவாதிரைத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். திருவாதிரை என்றாலே நடராஜரை சப்பரத்தில் வைத்து தூக்கிச் செல்வதுதான் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் எங்களது சுவாரசியமெல்லாம் திருவாதிரைக்கு முந்தின நான் இரவு கொண்டாட்டம் தான்! ஆம்; திருவாதிரைக்கு முதல்நாள் இரவு சப்பரத்தை பூவால் ஜோடிக்கும் வேலை இரவு முழுக்க நடக்கும். அந்த மாதிரி வேலைகளை என் போன்ற சிறுவர்களை வைத்துதான் செய்து முடிப்பார்கள்! இரவு, நேரம் செல்லச் செல்ல, ஒவ்வொருவராக நைஸாக அங்கிருந்து நகர்ந்து நகர்வலம் தொடங்குவோம்! அதன்பின்புதான் சுவாரஸ்யமே!

எங்கள் குழுவுக்கு நண்பன் பழனிதான் லீடர்!(இப்போ அவன் அமெரிக்காவில் அலப்பரையை கட்டிக்கிட்டு இருக்கிறான்!) இரவினைச் சுமந்தபடி கழுதைகள் நிறைய ஆங்காங்கே திரியும்... அவைதான் எங்கள் முதல் இலக்கு! ஒவ்வொரு கழுதையாக மிரட்டி, அதட்டி, விரட்டியதில் எதாவது ஒரு சோப்லாங்கிக் கழுதை எங்கள் கைகளில் மாட்டும்! உடனே ஒரு கொச்சக் கயிற்றால் அதற்கு கடிவாளம் போட்டு அமுக்கி, அதன்மீது ஒருவனை ஏற்றிவிட்டு(நாங்க உஷார்! நாங்க ஏற மாட்டோம்!)அந்த கழுதையை வாலை முடுக்கி விரட்டுவோம்! அது தலை தெறிக்க ஓடி எங்காவது அவனை கீழே தள்ளி விட்டு தப்பிச்செல்லும்!

அடுத்து எங்கள் இலக்கு வாழைப்பழம்! திருவாதிரைக்குப் போடும் பந்தல் மிகவும் உயரமாக, சற்று வலுவாக இருக்கும். அப்பந்தலின் முகப்பில் மிகவும் உயரமான வாழை மரங்களைக் கட்டி வைப்பதுதான் வழக்கம். அதன் வாழைக்குலையும் மிகவும் பெரிதாக அடர்த்தியாக நிறைய காய்களுடன் தலைகவிழ்ந்து எங்களைப் பார்த்து "வந்து பறித்துச் செல்லுங்கள்!" என அழைப்பது போல பரிதாபமாக நிற்கும்! நாங்களும் அதன் அழைப்பை நிராகரிக்காமல் வாழைப்பழத்தை(அது பழமாக கூட இருக்காது! அரைப்பழமாகத்தான் இருக்கும்!) பறிக்க திட்டம் வகுப்போம்! அந்த கோவில் சாவடியின் மொட்டை மாடிக்குத் தாவி ஏறி, பின்பு மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து பந்தலின் முகப்புக்கு வருவோம். பின்பு எடை குறைவான ஒருவனை பந்தலின் வழியாக நடக்கவைத்து வாழைப்பழங்களை பிடுங்கி எறிய வைப்போம்! கீழே சப்பர வேலை செய்பவர்களுக்குத் தெரியாமல் சாமர்த்தியமாகத் திருடித் தின்னும்போது, அந்த அரைப்பழமும்கூட இனிப்பாகவே இருக்கும்!

அதற்குப் பிறகும் தூக்கம் வராமலிருக்க, நடுத்தெருவில், விளக்கு வெளிச்சத்தில் ஒளிந்து விளையாடுவோம். அந்த சமயத்தில் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்குபவர்களை உசுப்பி விட்டு ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கும் வேலையும் நடக்கும்! விடிய விடிய தூங்காமல் இருந்தாலும், மறுநாள் சப்பரம் தூக்கும்போது, சப்பரத்தின் முன்பாக கலர் கலர் கொடிகளைத் தூக்கிச் செல்வதற்கு பெரிய போட்டியே நடக்கும்! சப்பரம் சுற்றி வந்து நின்றபிறகுதான் எங்கள் குழு கலையும்!!!

இப்போதும் திருவாதிரை நடப்பதை பார்க்கிறேன்... சப்பரத்தை வண்டியில் இழுத்துச் செல்கிறார்கள்... தூக்கிச் செல்வதில்லை. முன்னால் கொடி பிடித்துச் செல்லும் கூட்டத்தைக் காணவில்லை. பஜனை கோஷ்டியிலும் ஆட்கள் குறைவு.(நான் பஜனையும் பாடிச் சென்றிருக்கிறேன்!) இப்போது இதுமாதிரி சின்னச் சின்ன கொண்டாட்டங்களையும் சிறுவர்கள் தொலைக்காட்சி மோகத்தால் இழந்துவிட்டார்களா? அல்லது கிரிக்கெட் மோகத்தால் விலகிச் சென்று விட்டார்களா என்பது அந்த நடராஜருக்குத்தான் தெரியும்!