Tuesday, December 29, 2009

கழுதை விரட்டு!

சிறு வயதில் நாம் செய்யும் குறும்புத்தனங்களை இப்போது அசைபோட்டுப் பார்ப்பது மிகவும் சுவாரசியமான விசயமாகும்! அதுவும் என்னை மாதிரி கிராமத்தானுக்கு நிறையவே விசயமிருக்கும்...

எங்க தெருப் பொங்கலில் திருவாதிரைத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். திருவாதிரை என்றாலே நடராஜரை சப்பரத்தில் வைத்து தூக்கிச் செல்வதுதான் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் எங்களது சுவாரசியமெல்லாம் திருவாதிரைக்கு முந்தின நான் இரவு கொண்டாட்டம் தான்! ஆம்; திருவாதிரைக்கு முதல்நாள் இரவு சப்பரத்தை பூவால் ஜோடிக்கும் வேலை இரவு முழுக்க நடக்கும். அந்த மாதிரி வேலைகளை என் போன்ற சிறுவர்களை வைத்துதான் செய்து முடிப்பார்கள்! இரவு, நேரம் செல்லச் செல்ல, ஒவ்வொருவராக நைஸாக அங்கிருந்து நகர்ந்து நகர்வலம் தொடங்குவோம்! அதன்பின்புதான் சுவாரஸ்யமே!

எங்கள் குழுவுக்கு நண்பன் பழனிதான் லீடர்!(இப்போ அவன் அமெரிக்காவில் அலப்பரையை கட்டிக்கிட்டு இருக்கிறான்!) இரவினைச் சுமந்தபடி கழுதைகள் நிறைய ஆங்காங்கே திரியும்... அவைதான் எங்கள் முதல் இலக்கு! ஒவ்வொரு கழுதையாக மிரட்டி, அதட்டி, விரட்டியதில் எதாவது ஒரு சோப்லாங்கிக் கழுதை எங்கள் கைகளில் மாட்டும்! உடனே ஒரு கொச்சக் கயிற்றால் அதற்கு கடிவாளம் போட்டு அமுக்கி, அதன்மீது ஒருவனை ஏற்றிவிட்டு(நாங்க உஷார்! நாங்க ஏற மாட்டோம்!)அந்த கழுதையை வாலை முடுக்கி விரட்டுவோம்! அது தலை தெறிக்க ஓடி எங்காவது அவனை கீழே தள்ளி விட்டு தப்பிச்செல்லும்!

அடுத்து எங்கள் இலக்கு வாழைப்பழம்! திருவாதிரைக்குப் போடும் பந்தல் மிகவும் உயரமாக, சற்று வலுவாக இருக்கும். அப்பந்தலின் முகப்பில் மிகவும் உயரமான வாழை மரங்களைக் கட்டி வைப்பதுதான் வழக்கம். அதன் வாழைக்குலையும் மிகவும் பெரிதாக அடர்த்தியாக நிறைய காய்களுடன் தலைகவிழ்ந்து எங்களைப் பார்த்து "வந்து பறித்துச் செல்லுங்கள்!" என அழைப்பது போல பரிதாபமாக நிற்கும்! நாங்களும் அதன் அழைப்பை நிராகரிக்காமல் வாழைப்பழத்தை(அது பழமாக கூட இருக்காது! அரைப்பழமாகத்தான் இருக்கும்!) பறிக்க திட்டம் வகுப்போம்! அந்த கோவில் சாவடியின் மொட்டை மாடிக்குத் தாவி ஏறி, பின்பு மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து பந்தலின் முகப்புக்கு வருவோம். பின்பு எடை குறைவான ஒருவனை பந்தலின் வழியாக நடக்கவைத்து வாழைப்பழங்களை பிடுங்கி எறிய வைப்போம்! கீழே சப்பர வேலை செய்பவர்களுக்குத் தெரியாமல் சாமர்த்தியமாகத் திருடித் தின்னும்போது, அந்த அரைப்பழமும்கூட இனிப்பாகவே இருக்கும்!

அதற்குப் பிறகும் தூக்கம் வராமலிருக்க, நடுத்தெருவில், விளக்கு வெளிச்சத்தில் ஒளிந்து விளையாடுவோம். அந்த சமயத்தில் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்குபவர்களை உசுப்பி விட்டு ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கும் வேலையும் நடக்கும்! விடிய விடிய தூங்காமல் இருந்தாலும், மறுநாள் சப்பரம் தூக்கும்போது, சப்பரத்தின் முன்பாக கலர் கலர் கொடிகளைத் தூக்கிச் செல்வதற்கு பெரிய போட்டியே நடக்கும்! சப்பரம் சுற்றி வந்து நின்றபிறகுதான் எங்கள் குழு கலையும்!!!

இப்போதும் திருவாதிரை நடப்பதை பார்க்கிறேன்... சப்பரத்தை வண்டியில் இழுத்துச் செல்கிறார்கள்... தூக்கிச் செல்வதில்லை. முன்னால் கொடி பிடித்துச் செல்லும் கூட்டத்தைக் காணவில்லை. பஜனை கோஷ்டியிலும் ஆட்கள் குறைவு.(நான் பஜனையும் பாடிச் சென்றிருக்கிறேன்!) இப்போது இதுமாதிரி சின்னச் சின்ன கொண்டாட்டங்களையும் சிறுவர்கள் தொலைக்காட்சி மோகத்தால் இழந்துவிட்டார்களா? அல்லது கிரிக்கெட் மோகத்தால் விலகிச் சென்று விட்டார்களா என்பது அந்த நடராஜருக்குத்தான் தெரியும்!

No comments:

Post a Comment