Monday, January 4, 2010

எங்கண்ணே நீயுறங்கு! எங்கண்ணுமணி நீயுறங்கு!

"எங்கண்ணே நீயுறங்கு! எங்கண்ணுமணி நீயுறங்கு!
எம்பொன்னே நீயுறங்கு!..." எனத்தொடங்கி தாலாட்டுப் பாடத்தொடங்கினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எனது ஆச்சி சுந்தரத்தாயம்மாளின்(அம்மாவின் அம்மா) குரல்வளம் அப்படி! தனது பத்துக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தான் இறுதியாகக் கண்ணுறங்கும் வரை அவங்க தாலாட்டுப் பாடி உறங்க வைக்காத பேரக் குழந்தைகளே இல்லை எனலாம்.

தாலாட்டு என்று மட்டுமில்லாமல் அனைத்து வகையான நாட்டுப்புறப் பாடல்களிலும் முத்திரை பதித்தவர். சாமி கும்பிடும் வேளையில் கந்த சஷ்டி கவசம் தொடங்கி பல்வேறு பக்திப் பாடல்களையும் பாடி, பக்திப் பரவசத்திலும் மூழ்கி விடுவார். தெருப் பொங்கலென்று வந்தால், தானானே பாட்டுப் பாடுபவர்களுக்கு நடுவே மைக் பிடித்துப் பாடுவதும் இவங்க தான். குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது பாடும் நலங்குப் பாட்டு முதலாக, ஒப்பாரிப் பாடல்வரை அனைத்தும் பாட வல்லவர். அவங்க மறைவதற்கு முன்பாக, கடைசியாக, சென்னையில் வசிக்கும் எனது குழந்தையின் பெயர் சூட்டும் நிகழ்ச்சியின்போது, அப்போது பாட வேண்டிய நலங்குப் பாடலை செல்பேசி வாயிலாக அவங்களிடம் கேட்டறிந்து பாடினோம்.

அவங்க பிறந்த குடும்பத்திலும் அவங்க தான் முதல் குழந்தை. தான் பிறந்து வளர்ந்த காலத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்ததாக பெருமையுடன் தனது பிறந்த வீட்டை நினைவு கூறுவது இவங்க வழக்கம். நல்லா சாப்பிட்டு வளர்ந்ததால்தான் தன்னால் பத்து குழந்தைகள் பெற்ற பிறகும், இந்த வயதிலும் தெம்பாக வேலை செய்ய முடிவதாக அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்!.

தனது தாய்மாமனையே சொந்தத்திற்குள் மணமுடித்துக் கொண்டவர். எங்க தாத்தாவும் இவங்களும் சேர்ந்து, தனது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, சொந்தத்திலுள்ள பலருக்கும், தான் வசிக்கும் தெருவிலிருப்பவர்கள் பலருக்கும் முன்னின்று திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார்கள். எங்கள் சொந்தக்காரர்கள் வட்டத்தில் எங்க ஆச்சிதான் அச்சாணி மாதிரி. இதனால் எங்க தாத்தாவின் வீட்டையும் அனைவரும் "ஆச்சி வீடு" என்றுதான் அழைப்பது வழக்கம். ஏதேனும் விஷேசத்தின்போது உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டால் ஆச்சி வீடே அமர்க்களப்படும்! பகலில் கலகலப்பான அரட்டையோடு நின்றுவிடாமல் கண்டிப்பாக இரவில் நடுநிசிவரை சீட்டுக்கச்சேரி நடக்கும்! அதில் எங்க ஆச்சி தாத்தா இருவருமே கலந்து கொள்வது தான் ஹைலைட்!

மகிழ்ச்சியின்போது என்று மட்டுமில்லாமல், எங்கள் ஊரில் வெள்ளம் சூழ்ந்த போது உறவினர்கள் பலருக்கும் அடைக்கலம் தந்ததும் ஆச்சி வீடுதான். தனது உயிர் அடங்குவதற்கு முந்தைய நிமிடம்வரை மரணத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல், நன்கு நடமாடி, இறுதி நிமிடத்தில், தனது மகளின் வீட்டிலேயே உயிர் துறந்தவர். சாதி மதம் பாராமல் அனைத்துதரப்பு மக்களோடும் ஒன்றிப் பழகியவர். தெருவில், யார் வீட்டில் எந்த ஒரு சின்ன விஷேசமென்றாலும் ஆச்சிக்கு அழைப்பு வந்துவிடும்! அவங்களும் தவறாமல் கலந்துக்குவாங்க. அதனால்தான் தாத்தாவின் மறைவின்போது வந்த மக்கள் கூட்டத்தை விட ஆச்சியின் மறைவிற்கு வந்த கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக எனது ஆச்சி மறைந்தவுடன் அவங்க கண்களை தானம் செய்தோம். எங்கள் ஊரில் கண் தானம் செய்யும் மூன்றாவது நபர் எங்கள் ஆச்சிதான். அந்த வகையில், மறைவிற்குப் பிறகும் தனது கண்தானத்தினால், விழிப்புணர்வுச் சுடரேற்றியதாக எங்கள் ஆச்சியின் மீது எங்கள் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது!

No comments:

Post a Comment